மகாராஷ்டிர மாநில அரசுப் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம், குடிபோதையில் இருந்த ரவுடி ஒருவன் அநாகரிகமாக நடந்து கொண்டு, அப்பெண்ணின் மீதே சிறுநீர் கழித்த அருவருக்கத்தக்கச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனது சிறு வயது மகளுடன் அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம், போதையில் இருந்த சமூக விரோதி ஒருவன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளான். பெண் பயணி அதற்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவித்து அவனைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த அந்த ரவுடி எல்லையைக் கடந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளான்.
தன் தாயின் கண் முன்னாடியே அந்த ரவுடி செய்த இந்த அருவருக்கத்தக்கச் செயலைக் கண்டு, கூட வந்த பச்சிளம் பெண் குழந்தை பேரதிர்ச்சியில் உறைந்து போனாள். ஓடும் பேருந்தில் சக பயணிகள் மற்றும் நடத்துனர் இருக்கும்போதே, அந்தப் பெண்ணின் மீது நேரடியாகச் சிறுநீர் கழித்து தனது கொடூர புத்தியைக் காட்டியுள்ளான்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறித் துடிக்கவே, பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக அந்த ரவுடியைச் மடக்கிப் பிடித்து அவனது அராஜகத்தைத் தடுத்து நிறுத்தினர். பொதுப் போக்குவரத்தான அரசுப் பேருந்திலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்தச் சமூக விரோதியை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டிய அரசுப் பேருந்தில், அதுவும் ஒரு சிறுமியின் கண் முன்னேயே நடந்த இந்த அநாகரிகச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
