உத்தராகண்டில் உள்ள குருகுலம் ஒன்றிற்கு கல்வி கற்கச் சென்ற ஒரே மகன், மர்மமான முறையில் உயிரிழந்ததுடன் அவரது உடல் வீட்டின் வாசலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவனின் உடல் முழுவதும் சுமார் 45 காயங்கள் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கொலையாளிகள் சிறுவனைச் சித்திரவதை செய்து, சிகரெட்டினால் உடலின் பல்வேறு இடங்களில் சூடு வைத்துள்ளனர். கல்வி கற்க அனுப்பிய இடத்தில் தனது பிள்ளைக்கு நேர்ந்த இந்த கதி, அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்கள் சிறுவனின் உடலை வீட்டின் முன் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். தற்பொழுது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் குருகுல நிர்வாகத்தின் மீதும், அங்குள்ள ஊழியர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் எனப் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு புனிதமான கல்வி நிறுவனமாக கருதப்படும் குருகுலத்தில் இத்தகைய வன்கொடுமை நிகழ்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.