அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸில் பணியாற்றிய அவரை, மின்னியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா போயிங் விமானம் தரையிறங்கியதும், போலீசார் விமானி அறையில் நுழைந்து கைது செய்தனர். சிறுவர்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவருக்கு எதிராக மோசமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை ஏற்கனவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பகவாகர் மீது தொடக்கத்தில் இருந்து அமெரிக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. விமானி அறையில் இருந்த அவரை நேரடியாக கைது செய்தது சான் பிரான்சிஸ்கோ போலீசாரின் திட்டமிட்ட நடவடிக்கையாக இருந்தது.
இந்த பரபரப்பான சம்பவம் குறித்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் பதிலளிக்கையில், “முக்கியமான ஒழுங்குமுறைகளை நாம் கடைப்பிடிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். ருஸ்டம் பகவாகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளது. உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவது விமானப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
