மதுரை பழங்காநத்தம் பகுதியில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நிலவும் மதவெறி அரசியலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மதப் பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்ய நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் திட்டங்கள் ஒருபோதும் பலிக்காது என்றும், பீகார் அல்லது உத்தரப் பிரதேசத்தைப் போல தமிழகத்தை மாற்ற முடியாது என்றும் கடுமையாக எச்சரித்தார்.
கொள்கை ரீதியாகத் தமிழகத்தைப் பாதுகாக்கவே தாங்கள் திமுக கூட்டணியில் இருப்பதாகவும், வெறும் தேர்தல் இடங்களுக்காகத் தாங்கள் அரசியலில் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரைச் சாடிய திருமாவளவன், அவர்கள் இருவரும் பாஜகவின் பின்னணியில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். விஜய் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காகக் கட்சி தொடங்கியிருப்பதாகவும், சீமான் பிரபாகரனின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்ப்பதாகவும் விமர்சித்தார்.
திமுகவை விமர்சிப்பதில் தங்களுக்கு உடன்பாடு இருந்தாலும், திராவிடக் கொள்கைகளையும் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகளையும் அழிக்க நினைக்கும் ‘பார்ப்பனியம்’ என்ற கடப்பாரையைத் தடுத்து நிறுத்தவே தாங்கள் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
