உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பள்ளியில், மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் ‘அதிகமாக’ சௌமெய்ன் சாப்பிட்டதாகக் கூறி அவர்கள் பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கேண்டீனில் மாணவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டதாகவும், இது பள்ளியின் ஒழுக்க விதிகளை மீறுவதாகும் என்றும் நிர்வாகம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பள்ளி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பசிக்கு உணவு உண்பது எப்படி ஒரு குற்றமாகும் என்றும், அற்பமான காரணங்களுக்காக மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் வகையில் இடைநீக்கம் செய்வது முறையற்றது என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், லக்னோவின் இந்தச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.