ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள சௌகிபாஸ் கிராமத்தில், மிட்டாய் என நினைத்து வெடிபொருளைக் கடித்த மூன்று வயது சிறுமிக்கு தாடை மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) காலை, அக்‌ஷு என்ற 3 வயது சிறுமி, தனது 6 வயது அக்காவுடன் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்றுள்ளார். அப்போது கடைக்காரரான சுதில் (என்கிற காலா), சிறுமியிடம் மிட்டாய் போன்ற ஒரு பொருளைக் கொடுத்துள்ளார். அது பார்ப்பதற்கு மிட்டாய் போல இருந்தாலும், உண்மையில் அது வெடிபொருள் கலந்த ஒரு பொருளாக இருந்துள்ளது.

சிறுமதி அதை மிட்டாய் என நினைத்து வாயில் போட்டு கடித்தபோது, அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சிறுமியின் தாடை மற்றும் கன்னம் சிதைந்து ரத்தம் கொட்டியது. சிறுமி அங்கேயே மயங்கி விழுந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி அக்‌ஷு, ஆல்வாரில் உள்ள சானியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் சிறுமிக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், சிறுமி அபாயக் கட்டத்தைத் தாண்டி ஐ.சி.யு பிரிவில் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் தாடைப் பகுதி கடுமையாகச் சிதைந்திருந்ததால், அதனைச் சீரமைக்க சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கடைக்காரரை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், “சிறுமி கண்ணாடித் துண்டின் மீது விழுந்ததால் தான் காயம் ஏற்பட்டது” என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், சிறுமியின் காயம் வெடிபொருளால் ஏற்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

தடயவியல் நிபுணர்கள் அந்த வெடிபொருள் எத்தகையது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சிறு பிள்ளைகளைத் தனியாகக் கடைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், அறிமுகமில்லாத மிட்டாய்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கையாள்வதில் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் மருத்துவர் தய்யப் கான் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.