சக பெண் வழக்கறிஞரின் அந்தரங்க காட்சிகளை ரகசியமாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பிய அவரது உதவியாளரை பாலக்காடு நகர தெற்கு காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பிராயிரி பகுதியைச் சேர்ந்த 24 வயது முகமது ஷபிக் என்பவர், ஒரு பெண் வழக்கறிஞரிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

இருவரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அந்தப் பெண் வழக்கறிஞருக்குத் தெரியாமல் முகமது ஷபிக் அவரது அந்தரங்கக் காட்சிகளைத் தனது கைபேசியில் ரகசியமாகப் படம்பிடித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து முகமது ஷபிக்குடனான நட்பை அவர் துண்டித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முகமது ஷபிக், தன்னிடம் இருந்த அந்தரங்கக் காட்சிகளை அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கட்செவி அஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் முகமது ஷபிக்கை கைது செய்தனர்.

கைதான நபரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நட்பை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.