தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அவர் முதலமைச்சரான பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அதனை மிகச் சிறப்பாகக் கொண்டாட தவெகவினர் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்து, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று அதிரடியாக நடந்துள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நம்முடைய முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவிற்கு ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் அன்னதானம் நடத்தியும் மிக பயனுள்ள வழியில் கொண்டாட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதே நேரத்தில், முதலமைச்சர் விஜய்யின் கடுமையான உத்தரவுக்கிணங்க, தவெக சார்பில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் பேனர்களோ அல்லது கட்-அவுட்டுகளோ வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் மிக ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். கூட்டங்களில் ‘சரி’ என்று சொல்லிவிட்டு, விழா நடக்கும் இடத்திற்குச் செல்லும்போது தொண்டர்கள் வைத்துவிட்டார்கள் என்று சாக்குப்போக்கு கூறுவதை இனி ஏற்றுக்கொள்ள முடியாது என நிர்வாகிகளை அவர் எச்சரித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் தவெக-வில் பேனர் கலாச்சாரம் என்பதே அடியோடு இருக்கக் கூடாது என்ற முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு, தற்பொழுது பொதுமக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது!
