நெருங்கிய அண்டை நாடான நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரழிவின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்தின் பனியாற்று ஏரிகள் நாட்டின் அடுத்த பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

சிக்கிம் மாநிலத்தில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இதில் பல ஏரிகள் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. நேபாள நிகழ்வுக்குப் பிறகு விழித்துக்கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள், அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கையில், சிக்கிமில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் தற்போதைய நிலைக்கு அபாயகரமானவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஏரிகள் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக, முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய 16 ஏரிகளில், 13 ஏரிகள் ஏற்கனவே விரிவான அறிவியல் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான ஏரிகள் சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளன. இந்த ஏரிகளின் ஆழம், நீளம், நீரின் கொள்ளளவு, பனிப்பாறைகளின் தற்போதைய நிலை மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து வல்லுநர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, எந்தவிதப் பேராபத்தையும் தவிர்க்கும் பொருட்டு அபாயகரமான ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைக்க சிக்கிம் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து சிக்கிம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் சந்தீப் தாம்பே கூறுகையில், ஆபத்தானதாகக் கண்டறியப்பட்டுள்ள 16 ஏரிகளிலும் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை அரசு தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாகவும், ஷாகோ சூ, கெராங் மற்றும் டோல்மா சம்பாங் ஆகிய பகுதிகளில் தானியங்கி கண்காணிப்பு நிலையங்கள் ஏற்கனவே முழுவீச்சில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்படக்கூடிய ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள் அல்லது வேறு ஏதேனும் ஆபத்தான வானிலை மாற்றங்கள் ஏற்படுவதை உடனுக்குடன் கண்காணிக்க ஏதுவாக, நவீன டாப்ளர் வானிலை ரேடார்களை நிறுவுவதற்கான இடங்களை அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். நேபாளப் பெருவெள்ளம் உணர்த்திய பாடத்தின் மூலம், சிக்கிம் மாநிலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது.