விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, கட்சித் தலைமையின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு, கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவுவதிலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் செய்யூர் தொகுதியில் வெற்றி பெற்று, ஆதிதிராவிடர் மற்றும் மீனவ மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் உதவியோடு நிறைவேற்றியுள்ளதாகவும், இதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், சமீபகாலமாக கட்சித் தலைமை அடிக்கடி தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றி, தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகப் பனையூர் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று வரை ஒரு நடிகரை பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் பிள்ளை என்று விமர்சித்துவிட்டு, இன்று அவருடன் கைகோர்க்கத் துடிப்பது கொள்கை தடம் மாறுவதைக் காட்டுவதாகவும், சினிமா கவர்ச்சியின் பின்னால் கட்சி செல்வது ஆபத்தானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படும் தலைமையின் கீழ் பயணிக்க முடியாது என்பதால், விசிகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ஆனால் அம்பேத்கர், பெரியார் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனது பயணம் தொடரும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
