தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சியில் சமூக காலமாக உட்கட்சி பூசல்கள் நிலவுகிறது. கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்திய நிலையில் அவரை எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய புள்ளிகளை திமுக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.‌

 

அந்த வகையில் அதிமுக கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்பி மைத்ரேயன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ் தரப்பில் இருந்து விலகி ஓபிஎஸ் பக்கம் செயல்பட்டு வந்த மருது அழகுராஜூம் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். நேற்று திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் இன்னும் பலர் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைவார்கள் என்று ஒரு புதிய குண்டையும் தூக்கி போட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக இன்னும் யார் யார் திமுகவில் இணைய போகிறார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.