சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மற்றும் துபாயில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் களம் காணும் அணிகள்  இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்துடன் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி மோதுகின்றது. இதற்காக கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி துபாய் புறப்பட்டு சென்ற இந்திய அணியினர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கல் அவசர அவசரமாக துபாயில் இருந்து புறப்பட்டு தாயகம் சென்றுள்ளார். காரணம் என்னவென்றால் அவருடைய தந்தை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மோர்கல் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். இருந்தாலும் அவர் மீண்டும் எப்போது இந்திய அணியுடன் இணைவார் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர் திடீரென கிளம்பிச் சென்றுள்ளது வீரர்களுக்கு சற்று தொலைவாக பார்க்கப்படுகிறது.