“நல்ல செயல்கள் எப்போதும் நல்ல பலனைத் தரும்” என்பது சீனாவின் ஹுனான் மாகாணத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. ஒரு தொழிலதிபர் பெண், மரணதண்டனைக்கு சமமான சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்றிய டெலிவரி இளைஞருக்கு தனது நிறுவன பங்குகளை வழங்கியுள்ளார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த சென் (Chen) என்ற பெயருடைய தொழிலதிபர், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது குளிர்சாதனக் கம்பனியின் வணிக ஃப்ரீசரில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் அவர் ஃப்ரீசரின் கதவை முழுவதுமாக மூடிவிட்டார். பின்னர் கதவை திறக்க முடியாத சூழ்நிலையில், -20°C வெப்பநிலையிலான ஃப்ரீசருக்குள் சிக்கிக்கொண்டார்.
அந்த நேரத்தில் அவரிடம் தொலைபேசியும் இல்லை; மேலும் கோடைக்கு ஏற்ற அணிகலன்களுடன் மட்டுமே இருந்ததால், நேரம் கடந்தபோதும் வெளியே யாரும் வரமாட்டார்கள் என்ற பயத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். கதவை தட்டி தனது இருப்பை வெளிக்காட்ட முயன்றார்.
அதிர்ஷ்டவசமாக, அந்த வழியாக சென்ற லியு சூ (Liu Su) என்ற டெலிவரி இளைஞர் அவரது சத்தத்தை கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, கதவை திறந்து பெண்ணை வெளியே இழுத்தார். குளிரின் தாக்கத்தால் சுயநினைவு இழந்திருந்த செனுக்கு மீண்டும் உணர்வு திரும்ப 2 மணி நேரம் ஆனது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென், “என்னுடைய அழைப்பைக் கேட்டு ஒருவர் கூட வந்து இருக்கவில்லை என்றால், நான் அந்த ஃப்ரீசரிலேயே இறந்திருப்பேன்” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தன் உயிரை காப்பாற்றிய லியு சூக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த செயல், சமூக ஊடகங்களில் புகழ் பெறும் மனிதநேய சம்பவமாக பேசப்பட்டு வருகிறது. லியுவின் நேர்மையும், செனின் மனம்திறந்த நன்றியும், நவீன உலகத்தில் இன்னும் மனிதத்தன்மை உயிரோடு இருப்பதை நினைவூட்டுகிறது.
