ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியில் 9 வயது மாணவி அமயரா, கடந்த நவம்பர் 1ஆம் தேதி, பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 48 அடி உயரத்தில் இருந்து குதித்த அமயரா, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சியில் அவர் கம்பிச் சுவரில் ஏறி குதிப்பது பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தங்கள் மகள் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதாகவும்  இது குறித்து பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் அலட்சியமாக இருந்துவிட்டதாகவும் அமயராவின் பெற்றோர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

அமயராவின் தாயார் சிவானி, இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், தன் மகளை மாணவர்கள் கேலி செய்வதாகவும், இது குறித்து தான் வகுப்பாசிரியரிடம் கூறியபோது, ‘இது கோ-எட் பள்ளி, அதைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று ஆசிரியர் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் தெரிவித்தார். இந்த புகார் புதியதல்ல என்றும், கடந்த ஒரு வருடமாகவே மகளின் துன்புறுத்தல் குறித்து ஆசிரியர்களிடம் பலமுறை கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

“>

 

இந்தச் சம்பவம் நடந்த நவம்பர் 1ஆம் தேதி கூட, அமயரா தனது ஆசிரியரிடம் நான்கு முறைக்கும் மேல் புகார் கூறியதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒரு வருடத்திற்கு முன், “நான் பள்ளிக்குப் போக விரும்பவில்லை… தயவுசெய்து என்னை அனுப்பாதீர்கள்” என்று அமயரா அழுது புலம்பிய ஆடியோ பதிவை தாயார் சிவானி, வகுப்பாசிரியரிடம் அனுப்பியும் எந்தப் பயனும் இல்லை.

இந்தச் சோகமான சம்பவத்திற்குப் பிறகு, பள்ளி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. மேலும், அமயரா கீழே விழுந்த இடத்தை போலீஸ் வருவதற்கு முன்பே பள்ளி நிர்வாகம் சுத்தம் செய்து, ரத்தக் கறைகளை அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சந்தேகத்திற்கு இடமளிக்கும் சூழ்நிலைகளில் தங்கள் மகள் இறந்ததாகக் கூறி, அமயராவின் குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்தின் மீது எஃப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்துள்ளனர்.

கூட்டு பெற்றோர் சங்கம் (Joint Parents’ Association) சார்பிலும், பள்ளி ஆதாரங்களை அழிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.