நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு மும்பை அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நடைபெற்ற கலகலப்பான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த ஷர்துல் தாக்கூரை, அணியின் உரிமையாளர் நீதா அம்பானி வரவேற்று உரையாற்ற அழைத்தார். அப்போது பேசிய ஷர்துல், “நான் இந்த அணிக்கு முன்பே வந்திருக்க வேண்டியது…” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசத் தொடங்கினார்.

உடனே குறுக்கிட்ட ரோகித் சர்மா, “நீ எதையாவது சொல்ல வர்றியா?” (பழைய விவகாரங்களைக் குறிப்பிடுவது போல) என்று ஜாலியாகக் கேட்க, டிரெஸ்ஸிங் ரூமே சிரிப்பலையில் மூழ்கியது. இதனால் ஷர்துல் தாக்கூர் ஒரு நிமிடம் முகம் சிவந்து வெட்கிப் போனார். தொடர்ந்து பேசிய ஷர்துல், “இந்த மைதானம் எனக்கு கசப்பான மற்றும் இனிப்பான நினைவுகளைத் தந்துள்ளது. ஆரம்பக் காலத்தில் நெட் பௌலராகத் தொடங்கி இன்று மும்பை அணிக்காக ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதையும் இங்கேயே கழித்தால் எனக்கு பெருமகிழ்ச்சி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி பல சாதனைகளை முறியடித்துள்ளது. 220-க்கும் அதிகமான ரன்களை (Runs) இதற்கு முன்பு விரட்டிப் பிடிக்கத் தவறிய மும்பை அணி, முதல்முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்து சாதனை படைத்தது.