குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம், விஜாப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட கெரிடா கிராமத்தில், 30 வயதுடைய பெண் ஒருவர் கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, அந்த பெண்ணின் கணவரின் சகோதரி ஜமுனா தாகுர், அவர் உண்மையான மனைவியாக இருக்கிறாரா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, ஜமுனா, தனது கணவர் மனுபாய் தாகுர் மற்றும் இருவருடன் சேர்ந்து, அந்த பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, “உனது கணவருக்கு நீ உண்மையான மனைவி என்றால், கொதிக்கும் எண்ணெய் நிரப்பிய பானையில் கையை விட்டு நிரூபி. உண்மையான மனைவி என்றால் உனக்கு எதுவும் ஆகாது” என வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல், அந்த பெண் எண்ணெயில் தனது விரல்களை வைத்தார்.
உடனடியாக வெளியே எடுத்தாலும், அவரது விரல்கள் பலத்த காயமடைந்தன. இதில், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதால் அருகிலுள்ள விஜாப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜமுனா உள்பட நால்வரும் தப்பிச் சென்ற நிலையில், சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கொடூர சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
