பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த அமைப்பு வெளியிட்ட புதிய காணொளிகள் நாட்டின் பாதுகாப்பு அமைப்பை பெரிதும் கலங்கடிக்கச் செய்துள்ளன.
அக்டோபர் 8ஆம் தேதி கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற கடுமையான தாக்குதலில் 22 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக TTP கூறியுள்ளதுடன், தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் வாகனங்களும் அடங்கிய வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் இதை மறுத்து, 11 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவில் TTP தலைவர் கமாண்டர் காசிம் கேமரா முன் தோன்றி, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நேரடியாக மிரட்டும் வகையில் “நீ ஆணாக இருந்தால் போர்க்களத்தில் எங்களை எதிர்கொள்” என்றும், “உன் தாயின் பால் குடித்திருந்தால் சண்டையிடு” என்றும் கடுமையாக சவால் விடுத்துள்ளார். இதையடுத்து, காசிமை பிடிக்க உதவும் தகவல்களுக்காக பாகிஸ்தான் அரசு ரூ.10 கோடி பாகிஸ்தான் நாணயத்தில் (PKR) வெகுமதி அறிவித்துள்ளது.
BREAKING 🚨
TTP threatens Pakistan Army Chief Asim Munir, challenges him to face militants in Kohat rather than deploying soldiers. pic.twitter.com/7wTNu89tnq— AsiaWarZone (@AsiaWarZone) October 23, 2025
“>
இந்த தாக்குதல்களின் பின்னணியில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கம் இடையே பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. எல்லை தாண்டிய ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் பலியாகியதையடுத்து, இரு தரப்பினரும் துருக்கி மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்தில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அக்டோபரில் ஒப்புக்கொண்டனர்.

இருப்பினும், ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால், இந்த போர்நிறுத்தம் நீடிக்காது என இஸ்லாமாபாத் எச்சரித்துள்ளது. TTPயின் தாக்குதல்கள் மற்றும் வெற்றிகள், லஷ்கர்-இ-ஜாங்வி, ISKP மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளுக்கு கூடுதலாக தைரியம் அளிக்கக்கூடும் என பாகிஸ்தான் ஊடகங்கள் எச்சரிக்கின்றன.
கிளர்ச்சிகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியடைவதாக நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
