டோர் டேஷ் நிறுவனத்தில் டெலிவரி ஓட்டுநராக பணிபுரிந்த லிவி ரோஸ் ஹென்டர்சன் என்ற பெண், தன்னைப் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்ததாகக் கூறி புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அக்டோபர் 12ஆம் தேதி ஹென்டர்சன் ஒரு வாடிக்கையாளரின் இல்லத்திற்கு உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டின் கதவு அகலமாகத் திறந்திருப்பதையும், வாடிக்கையாளர் ஒரு சோபாவில் பகுதியளவு ஆடையின்றி படுத்திருந்ததையும் கண்டதாக அவர் கூறியுள்ளார்.

அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹென்டர்சன், அதை பதிவு செய்து பின்னர் டோர் டேஷ் நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன், அந்த வீடியோவை டிக்‌டாக்கில் பகிர்ந்துள்ளார். குறுகிய நேரத்தில் அந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது.

 

ஹென்டர்சன் தனது வீடியோவில், “நான் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்ததற்காகவே எனது கணக்கை டோர் டேஷ் முடக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் பரவலாக விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், டோர் டேஷ் நிறுவனம் ஓட்டுநர் ஹென்டர்சன் மற்றும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் இருவரின் கணக்குகளையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்துள்ளது.

நிறுவனத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இத்தகைய புகார்களை நாங்கள் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்கிறோம். பாலியல் வன்கொடுமை குறித்த புகாருக்காக ஹென்டர்சன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் வாடிக்கையாளரின் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆன்லைனில் பகிர்வது தனியுரிமை மீறலாகும், அது எங்கள் கொள்கைகளுக்கு எதிரானது” என தெரிவிக்கப்பட்டது.

மேலும், “அனைவரின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யும் நோக்கில் இரு கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளோம். கூடுதல் வழிகாட்டுதலுக்காக சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணிபுரிகிறோம்” எனவும் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.