2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் அரசியல் களத்தில் ஒரு சுவாரஸ்யமான தொகுதி மாற்றத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் ஆகிய இரு சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் ஒருவருக்கொருவர் தொகுதிகளை விட்டுக்கொடுத்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2016-ல் கோவை தெற்குத் தொகுதியில் வெற்றி பெற்ற அம்மன் அர்ஜுனன், 2021 தேர்தலில் பாஜகவுக்காக அந்தத் தொகுதியை வானதி சீனிவாசனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, தான் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது மீண்டும் ஒரு மாற்றமாக, வரும் 2026 தேர்தலில் அம்மன் அர்ஜுனன் தனது பழைய ராசியான தொகுதியான கோவை தெற்கில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்குப் பதிலாக வானதி சீனிவாசன் கோவை வடக்குத் தொகுதியில் களமிறங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ‘மியூச்சுவல் டிரான்ஸ்பர்’ கோவை அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே கோவையில் பலமான செல்வாக்கைக் கொண்டுள்ள இந்த இரு கட்சிகளும், தங்களது தொகுதிகளை இப்படி மாற்றி அமைப்பதன் மூலம் வெற்றியை மீண்டும் உறுதி செய்ய முடியும் எனத் திட்டமிட்டுள்ளனர். தொகுதிகள் கைமாறினாலும், கோவை கோட்டையை மீண்டும் தங்களது வசமே வைத்திருக்க வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக உள்ளனர்.
