ஆர்.கே.நகர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர் கேள்வி எழுப்பிய மக்களை அடிக்க முற்படுகிறார்.. ஏழை வயிற்றில் அடித்தவர்கள் யாரும் நல்ல வாழ்வு கண்டதில்லை! நன்றிகெட்ட இந்த எம்.எல்.ஏ எபிநேசரும் இதனை உணரும் காலம் தூரத்தில் இல்லை! என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை அறிவிக்க திமுக எம்எல்ஏ எபினேசர் நேற்று  நேரில் சென்ற போது, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கேள்விகள் எழுந்தன. அந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தங்களுக்கு ரூ.1,000 தொகை ஏன் வழங்கப்படவில்லை எனக் கேள்வியெழுப்ப, அதேபோல் மற்ற பொதுமக்களும், “இந்த  தெருவிலும் சில பெண்களுக்கு மட்டும் இந்த தொகை ஏன் மறுக்கப்பட்டது?” என கேட்க தொடங்கினர். இதற்குப் பதிலளித்த திமுகவினர், “மாடிவீடு கட்டி ஆடம்பரமாக வாழும் மக்களுக்கு அரசு சலுகை இல்லை” என்றனர்.

இந்த பதிலால் பதற்றம் அதிகரிக்க, அப்பகுதி இளைஞர்கள் சிலர் எம்எல்ஏவிடம் நேரடியாகக் கேள்விகள் எழுப்பினர். “இப்போது மனு கொடுக்கச் சொல்றீங்க, தேர்தல் வந்தாச்சு தானே காண வந்தீங்க? 7 மாதத்துல எங்க மனு ஏற்கபட்டு அந்த தொகை வருமா?” என கேட்டனர். அதற்கு பதிலளிக்கையில் எபினேசர் எம்எல்ஏ, “சொந்த வீடு உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது. அவங்க மகளிர் பேருந்திலும் பயணிக்கக் கூடாது” எனக் கூற, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“>

 

இந்த வாக்குவாதத்தின் போது எம்எல்ஏ எபினேசர், “நீங்க எல்லாரும் மென்டலா!” என்று பொதுமக்களை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை வீடியோவாக படம் பிடித்த நபரிடமிருந்து மொபைலை பறித்து அதைப் பதிவுகளை அழித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.