ஆன்லைனில் அனுமதியின்றி அந்தரங்க மற்றும் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பரவி வரும் சூழலில், அதனை தடுக்க தொழில்நுட்ப உதவியை நாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த வழக்கில், தனிப்பட்ட தருணங்களில் பிடிக்கப்பட்ட வீடியோக்கள் இணையதளங்களில் பரவுவதால் பல பெண்கள் பெரும் மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் என்றும், அவற்றை உடனடியாக அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பொது மக்களின் அந்தரங்க உரிமை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதால், ஆபாச மற்றும் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்யும் எட்டு முக்கிய இணையதளங்களை மத்திய அரசு உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், போலி செய்திகளைத் தடுக்கும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போல், அதே முறையில் AI மூலம் அந்தரங்க வீடியோக்களை தானாக கண்டறிந்து தடுக்கும் செயல்பாடுகளைத் தமிழக அரசு மற்றும் காவல்துறை இயக்குநர் செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்கான நடைமுறைகளை விரைந்து தயார் செய்யவும் ஹைகோர்ட் வலியுறுத்தியுள்ளது.
