உலகம் இனி வெறும் ‘தண்ணீர் பற்றாக்குறை’ என்ற நிலையைக் கடந்து, மீள முடியாத ஒரு ‘நீர் திவால்நிலை’ எனும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் வேகத்தை விட, மனிதர்கள் அதிகப்படியான நீரைப் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மற்றும் நன்னீர் ஆதாரங்கள் நிரந்தரமாகச் செயலிழந்து வருகின்றன.

இந்த நீர் திவால்நிலை என்பது வெறும் தற்காலிகத் தட்டுப்பாடு அல்ல இது பொருளாதார வீழ்ச்சியைப் போலவே நமது இயற்கைச் சமநிலை முற்றிலுமாகச் சிதைந்து போவதைக் குறிக்கிறது. குறிப்பாக, நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால் பெங்களூரு, சென்னை, டெல்லி போன்ற உலகின் முக்கியப் பெருநகரங்கள் பெரும் ஆபத்தில் உள்ளன.

இதனால் நிலம் உள்வாங்கும் அச்சுறுத்தல் எழுவதுடன், குடிநீர் விநியோகம் முற்றிலுமாக முடங்கும் நிலையை நோக்கி நாம் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். வருங்காலத் தலைமுறையினருக்குச் சொத்துக்களைச் சேர்ப்பதை விட, அவர்களுக்குத் தேவையான அடிப்படை உயிர் ஆதாரமான தண்ணீரைச் சேமிப்பதும், நீர் மேலாண்மையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.