அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி பதவியேற்றார். பதவியேற்ற கையோடு, தில்லி சிறையில் உள்ள முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு அவர் கடிதம் எழுதியிருப்பது இந்திய அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நியூயார்க் நகரின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையுடன் ஜோஹ்ரான் மம்தானி நேற்று பதவியேற்றுக்கொண்டார். திருக்குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து அவர் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கடந்த மேயர் தேர்தலில் மம்தானியை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்புக்குப் பின், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு மம்தானி கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 2020-ம் ஆண்டு தில்லி வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி கடந்த 5 ஆண்டுகளாக உமர் காலித் சிறையில் உள்ளார்.
அந்தக் கடிதத்தில் மம்தானி குறிப்பிட்டிருப்பதாவது: அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்கள் நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தை உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டவர் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறியதாவது:
“இந்தியாவின் இறையாண்மைக்கு யாரேனும் சவால் விடுத்தால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 140 கோடி மக்களும் ஓரணியில் திரண்டு நிற்பார்கள். இந்திய மக்கள் நாட்டின் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நமது உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர்கள் கருத்து தெரிவிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
