தூத்துக்குடி, சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரியின் மகள் ஜெமீலா (22), காந்திநகரைச் சேர்ந்த பெனோ என்பவரைக் கடந்த 2023-ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளான நிலையில், ஜெமீலாவுக்கு மூன்று முறை கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அவருக்குக் குழந்தை இல்லை என்று கணவர் வீட்டார் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், மீன் ஏல விற்பனையில் இருந்த கணவர் பெனோ, வேலையை விட்டுவிட்டு ஆன்லைன் ரம்மியில் சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். அந்தப் பணத்தை ஜெமீலாவின் 5 பவுன் நகையை அடகு வைத்து அடைத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், குழந்தை இல்லாத தம்பதிக்குச் சொத்தில் பங்கு இல்லை என்று மாமனார் மற்றும் கணவரின் சகோதரி ஆகியோர் பேசி, ஜெமீலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக, மகப்பேறு மருத்துவர் அறிவுரைப்படி ஜெமீலா சில நாட்களாகச் சகாயபுரத்தில் உள்ள தாய் ராஜேஸ்வரி வீட்டில் தங்கியிருந்தார். கணவன் வீட்டார் அளித்த தொடர்ச்சியான மன அழுத்தத்தால் விரக்தி அடைந்த ஜெமீலா, இன்று அதிகாலை தனது தாய் உறங்கிக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், ” காதலித்து திருமணம் செய்து கொண்ட “பெனோவுக்கு என்னைவிட அவர் சகோதரிகள் குடும்பம் தான் அவருக்கு மிகவும் பிடித்ததாக இருக்கு. இனிமேல் அவருடன் சென்று குடும்பம் நடத்தினாலும் நிம்மதியாக இருக்க முடியாது. உங்களை விட்டுட்டு இப்படி நான் பண்ண கூடாது ஆனால் என்னால் முடியவில்லை அம்மா. கணவர் பெனோவின் வீட்டில் அவர்கள் பண்ணுவது தான் சரி நான் தப்புன்னு சொல்றாங்க. அவங்க என்ன பேசினாலும் நான் கேட்டுகிட்டு இருக்கணும் அப்படின்னு எதிர்பார்க்கிறார்கள்.

அம்மா நான் திரும்பப் பெனோ வீட்டுக்கு போனாலும் என்னை நிம்மதியாக வாழ விட மாட்டாங்க அம்மா. என்னை மன்னித்துவிடு. நான் உன்னை விட்டு செல்கிறேன். என்னுடைய நகைகளை வாங்கி இருக்கும் கடனை அனைவருக்கும் கொடுத்துவிட்டு நீயும் என்னுடன் வந்துவிடு. நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்” என மனம் உருகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான இரண்டு ஆண்டுகளில் தற்கொலை நடந்ததால், கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெமீலாவின் தாயார் ராஜேஸ்வரி, தன் மகள் தற்கொலைக்குக் காரணமான கணவர் பெனோ, மாமனார் மற்றும் கணவரின் சகோதரி உட்பட நால்வர் மீது புகார் அளித்துள்ளார்.