ஐபிஎல் தொடரில் வெறும் 15 வயதிலேயே 680 ரன்களைக் குவித்து, 65 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இடது கை ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி.
இவருடைய இந்த அதிரடி பேட்டிங்கின் பின்னணியில் இருக்கும் ரகசியங்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனர் ஜுபின் பருச்சா வெளிப்படுத்தியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி விளையாடும்போது கால்களை அதிகமாக நகர்த்தாமல், நின்ற இடத்திலிருந்தே பேட்டின் வேகம் மற்றும் பந்தின் திசையைத் துல்லியமாகக் கணித்து சிக்ஸர்களை அடிக்கிறார்.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு அவரது பேட்டின் வேகத்தை அதிகரிக்க மூன்று மாதங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதால், அவரது பேட்டிங் வேகம் 30 சதவீதம் வரை மேம்பட்டுள்ளது என்று பருச்சா விளக்கியுள்ளார்.
மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டில் ஆன்-சைடில் மட்டுமே ரன்களைக் குவித்து வந்த வைபவ், தற்போது கடின உழைப்பால் ஆஃப்-சைடிலும் விளையாடும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாகப் பெரிய மாற்றங்கள் செய்யாவிட்டாலும், கடந்த ஓராண்டில் அவரது தன்னம்பிக்கை பன்மடங்கு அதிகரித்திருப்பதே இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம் என்று பயிற்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இவ்வளவு இளம் வயதில் இத்தனை நேர்த்தியாகவும், முதிர்ச்சியுடனும் விளையாடும் ஒரு வீரரைத் தான் பார்த்ததில்லை என்று பாராட்டியுள்ள ஜுபின் பருச்சா, சூர்யவன்ஷியின் விளையாட்டுச் சிந்தனை சச்சினைப் போலவே இருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
