அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோரைச் சித்தரிக்கும் புதிய சர்ச்சைக்குரிய சிலை ஒன்று, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. ‘தி சீக்ரெட் ஹேண்ட்ஷேக்’ (The Secret Handshake) என்ற பெயரில் இயங்கி வரும் பெயர் அறியப்படாத கலைஞர் குழுவினர், இந்த சிலைகளை வடிவமைத்து பொது இடங்களில் வைத்து வருகின்றனர்.
முன்னதாக, டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் கைகுலுக்கிக் கொள்வது போன்ற சிலையை வைத்திருந்த அதே குழுவினர், தற்போது ‘கிங் ஆஃப் தி வேர்ல்ட்’ (KING OF THE WORLD) என்ற பெயரில் 12 அடி உயரத்திலான புதிய சிலையை நிறுவியுள்ளனர். இந்தச் சிலை, புகழ்பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் கட்டியணைத்துக் கொள்ளும் புகழ்பெற்ற காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திற்கு எதிரே, 3-வது தெருவில் இந்தச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலைக்குக் கீழே உள்ள பெயர்ப் பலகையில், “டைட்டானிக் படத்தின் ஜாக் மற்றும் ரோஸ் இடையிலான காதல் கதை, ஆடம்பரப் பயணம் மற்றும் ரகசிய ஓவியங்களை உள்ளடக்கியது. அதேபோல, டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான நட்பும் ஆடம்பரப் பயணம் மற்றும் ரகசியங்கள் நிறைந்திருந்தது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சிலையைச் சுற்றி டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஆகியோரைப் புகழ்வது போன்ற 10 பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்து, மத்திய அரசு அலுவலகக் கட்டடங்களில் தனது ராட்சத முகத்திலான பதாகைகளை வைத்துள்ளதை விமர்சிக்கும் வகையில், நாங்களும் சில பதாகைகளைச் சேர்த்துள்ளோம் என்று அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
அமெரிக்காவின் முக்கியப் புள்ளிகளுடன் தொடர்பிலிருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான விசாரணைகளை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, அதிபர் தேர்தலுக்குப் பிறகு வலுத்தது. கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை எஃப்.பி.ஐ. அமைப்பு பொதுவெளியில் வெளியிட்டது. இந்த ஆவணங்களின் வெளிப்பாட்டால், கலை உலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
