மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லத்தில் உள்ள லால்பாக் அவென்யூ காலனியில், வாயில்லா ஜீவன் என்று கூட பாராமல் ஒரு நாய்க்குட்டியை இரண்டு பெண்கள் ஸ்கூட்டியின் பின்னால் கயிற்றால் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காலனிக்குள் தெரு நாய்கள் குட்டி போட்டதால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள், அந்தக் குட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளனர்.

அங்கிருந்த சக பெண்கள் சத்தமிட்டுத் தடுத்தும் கேட்காமல், சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக அந்தப் பிஞ்சு நாய்க்குட்டியை அவர்கள் தரையில் இழுத்துச் சென்றதில், அந்தக் குட்டியின் உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இந்த அநாகரிகமான செயலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து, அந்த இரண்டு பெண்கள் மீதும் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் (Animal Cruelty Act) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

படுகாயமடைந்த அந்த நாய்க்குட்டிக்கு உள்ளூர் மக்கள் தற்போது சிகிச்சை அளித்து வரும் நிலையில், “இவர்களில் விலங்கு யார்?” என இணையதளங்களில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.