ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த பொதுமக்களுக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் இப்ராஹிம் ஜாதரான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் “இன்று இரவு காபூலில் மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையிலிருந்து தீப்பிழம்புகள் வானை எட்டியதைக் கண்டேன். நாளை நோன்பு இருக்கவிருந்த நமது சகோதரர்கள் இன்று நம்மிடம் இல்லை,” என்று அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ரமலான் மாதத்தின் புனிதமான நாட்களில் இத்தகைய கொடூரமான தாக்குதல் நடந்திருப்பது ஆப்கான் மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை ரஷீத் கான் மற்றும் முகமது நபி போன்ற முன்னணி வீரர்களும் “போர்க்குற்றம்” என்று கடுமையாகக் கண்டித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காபூல் நகரம் தற்போது சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் ஜாதரான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.