மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் நோட்டுக்காக, சீட்டுக்காக இந்த அரசியலுக்கு வரவில்லை. நம் நாட்டுக்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன். தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி செல்கின்றனர். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை கட்சிக்காக நான் எனக்காக கட்சி என செயல்பட வேண்டும்.

சீமானுக்கு பிறகு யார் தலைவர் என்ற போட்டியால் நாம் தமிழர் கட்சியிலிருந்து சிலர்  விலகி செல்கிறார்கள். நேர்மையாக கட்சி நடத்த சர்வாதிகாரியாக செயல்படுவேன். நான் ஒன்றும் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை, தமிழ் தேசியம் என்ற பெருங்கடலில் வலை வீசுகின்றேன். திராவிடம் பேசாமல், பெரியாரைப் பேசாமல் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இன்று வளர்ந்து நிற்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை. எனவே தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது என்று சீமான் தெரிவித்துள்ளார்.