
டெல்லியில் கடந்த 10 வருடங்களாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். இவர் சட்ட விரோத மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததோடு பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது பேசிய ஒரு விஷயத்தை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அதாவது அந்த பொதுக்கூட்டத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ஜாஸ்மின் சா எழுதிய கெஜ்ரிவால் மாடல் புத்தகத்தின் பஞ்சாபி பதிப்பை வெளியிட்டார்.
எங்களுடைய அரசு ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு எங்களுக்கு எதையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் நாங்கள் செய்து காட்டினோம். எங்களுடைய ஆட்சி மற்றும் அதிகாரத்திற்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். நெருக்கடிக்கு மத்தியிலும் நான் சிறப்பாக ஆட்சி செய்ததால் அந்த பணிக்காக என்னை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை தற்போது டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சத்சேவா விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, அரவிந்த் கெஜ்ரிவால் மனநல பரிசோதனை செய்ய வேண்டும். திறமையின்மை, ஊழல் மற்றும் குழப்பம் ஆகியவற்றுக்கு நோபல் பரிசு வழங்கினால் மட்டுமே அவருக்கும் கிடைக்கும். பல ஊழல் வழக்குகளில் சிக்கிய ஒருவருக்கு எப்படி நோபல் பரிசை பற்றி பேச தகுதியுள்ளது. அவர் டெல்லியை சூறையாடியதால் தான் மக்கள் அவரை நிராகரித்தனர். மேலும் அவர் நோபல் பரிசு பற்றி பேசினால் நீங்கள் சிரித்துக்கொண்டே கேட்க வேண்டும் என்றார்.