உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா சர்மா என்ற பெண், போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ட்விஷா, ஐந்து மாதங்களிலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தந்தை நவநிதி சர்மா மற்றும் உறவினர்கள், “நாங்கள் ஒரு கொடூரமான நரகத்தில் வாழ்ந்து வருகிறோம்” என்று தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். வரதட்சணை கொடுமை மற்றும் மாமியார் வீட்டாரின் சித்திரவதை காரணமாகவே ட்விஷா உயிரிழந்துள்ளார் என்றும், கணவர் தரப்பினர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கைத் திசைதிருப்ப முயல்வதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ட்விஷாவின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், அவரது மரணத்தில் பெரும் சதி இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். மேலும், இந்த வழக்கில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மூன்று நாட்கள் தாமதித்ததாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் ட்விஷாவின் மாமனார் ஓய்வு பெற்ற நீதிபதி என்பதால், தங்களுக்கு போபாலில் நீதி கிடைக்காது என்று கூறும் குடும்பத்தினர், ட்விஷாவின் உடலை எரியூட்ட மறுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிப் போராடி வருகின்றனர். தற்போதைய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க ஆறு பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, காவல்துறை தெரிவித்துள்ளது.