இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடக் காரணமானதாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணி, இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள உஸ்மான் தாரிக், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் பயணம் குறித்து நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார்
இது குறித்து அவர் கூறியதாவது, எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் நான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தபோது, தோனியின் வாழ்க்கையும் எனது வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருப்பதை உணர்ந்தேன்.
அவர் ஒரு வேலையில் இருந்துகொண்டே தனது கனவுக்காகப் போராடினார், நானும் ஒரு வேலையில் இருந்தேன். ஒரு சாதாரண மனிதராக இருந்து எப்படி வரலாறு படைக்க முடியும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். நானும் ஒரு சாதாரண மனிதன்தான். கடின உழைப்பைச் செலுத்தினால், தோனி பயணித்த அதே பாதையில் என்னாலும் வெற்றி பெற முடியும் என்று எனக்குத் தோன்றியது.” இவ்வாறு உஸ்மான் தாரிக் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் தாக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் வீரர்களிடமும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
