மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தை வனிதா இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்துள்ளார். இந்த படத்தில் ஷகிலா, ஸ்ரீமன், பவர் ஸ்டார் சீனிவாசன், பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.
நேற்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. படக் குழுவினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் தான் இசையமைத்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் ராத்திரி சிவராத்திரி பாடல் பாடலை அனுமதி பெறாமல் மிஸ்டர் அண்ட் மிசஸ் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். அந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என இளையராஜா மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கினை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வனிதா விஜயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இப்போதுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. நான் அவரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி பாடல் விவகாரம் குறித்து சொன்னேன். அவரும் ஓகே என்று தான் சொன்னார். அவர் ஒரு லெஜெண்ட். அவரை மிஞ்ச முடியாது. இசைக்கு அவர் கடவுள் மாதிரி.
கடவுளே நம் மீது கோபம் கொண்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து பாருங்கள் என கூறினார். மேலும் ஒரு பத்திரிக்கையாளர் நீங்கள் அவரை பார்த்துள்ளீர்கள். புகைப்படம் எடுத்துள்ளீர்கள். அனுமதி வாங்கவில்லை என்று சொல்கிறாரே? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வனிதா சோனி மியூசிக்கிடம் இருந்து உரிமம் பெற்றுள்ளோம்.
உதாரணமாக ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்குகிறோம் என்றால் அந்த வீட்டில் பிராண்ட் என்று ஒன்று இருக்கும். நான் பிரஸ்டீஜ்ஜில் இருக்கிறேன். பிரெஸ்டிஜ் நம்பி பணம் கொடுத்து பத்திரம் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருக்கும்போது இன்னொருவர் நடுவில் வந்து இது என்னுடைய பூமி என பணம் கேட்டால் என்ன செய்வது?
குட் பேட் அக்லி, மஞ்சுமெல் பாய்ஸ் பட விவகாரத்தில் வழக்கு போடும்போது மரியாதை கொடுத்து என்னிடம் அனுமதியாக வாங்கினால் காசு கூட தேவையில்லை. நான் கொடுத்து விடுவேன் என ராஜா அப்பா கூறினார். நானும் அதைத்தான் செய்தேன். நான் அவர் வீட்டில் பூஜை செய்து உள்ளேன்.
ஜீவா அம்மா கையில் லாக்கர் சாவியை வாங்கி நகையை எடுத்து அம்மனுக்கு போட்டு பூஜை செய்துள்ளேன். அந்த வீட்டிற்காக நான் அவ்வளவு தூரம் உழைத்துள்ளேன். அந்த குடும்பத்தில் நானும் ஒருத்தி. அந்த குடும்பத்திற்கு மருமகளாக போக வேண்டியவள். இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
