கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேருந்து பயணத்தின்போது வாலிபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக வீடியோ வெளியிட்டு, அவர் தற்கொலைக்குக் காரணமான இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 16-ஆம் தேதி, கோழிக்கோட்டைச் சேர்ந்த ஷிம்ஜிதா என்ற இளம்பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது, அருகில் நின்றிருந்த தீபக் (42) என்பவர் தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக அந்த வீடியோவில் அவர் குற்றம் சாட்டியிருந்தார். 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், பேருந்து நெரிசலில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது. நெட்டிசன்கள் பலரும் தீபக்கை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே, வீடியோவை ஆய்வு செய்த பலரும், பேருந்து நெரிசலில் கை தற்செயலாகவே உரசியது என்றும், அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் தீபக்கிற்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்தனர்.
தீபக்கின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு காவல்துறையினர் ஷிம்ஜிதா மீது வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் நடவடிக்கைக்கு அஞ்சித் தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா, நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், ஒரு நபரின் தற்கொலைக்குக் காரணமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சமூக வலைதளங்களில் உண்மைத்தன்மையை அறியாமல் வீடியோக்களைப் பகிர்ந்து ஒருவரின் உயிரைப் பறிக்கும் இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
