மத்தியப் பிரதேச மாநிலத்தை உலுக்கி வரும் முன்னாள் நடிகை ட்விஷா சர்மா மரண வழக்கில், போபால் காவல்துறையினரின் அலட்சியப் போக்கு மற்றும் ஆதாரங்களை கையாள்வதில் நடந்த குளறுபடிகள் எய்ம்ஸ் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் அம்பலமாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, ட்விஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ‘பெல்ட்’ (Belt), பிரேதப் பரிசோதனையின்போது விசாரணை அதிகாரியால் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த முக்கிய ஆதாரத்தைக் காவல்துறை கொண்டு வராததால், ட்விஷாவின் கழுத்தில் இருந்த காயங்களுக்கும், அந்த பெல்ட்டிற்கும் உள்ள தொடர்பை மருத்துவர்களால் ஒப்பிட்டு உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது. இது காவல்துறையினர் திட்டமிட்டு ஆதாரங்களை அழிக்க முயல்கிறார்களா என்ற பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
CCTV footage emerges in Twisha Sharma murder case (Bhopal):
31-year-old Twisha is seen climbing stairs shortly before her death. Her husband Samarth Singh & others attempt CPR. Ex-judge mother-in-law Giribala Singh enters a room. Later, three people carry her body downstairs. pic.twitter.com/mRRc9NvEP0
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 18, 2026
இதுகுறித்து இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவரான உதவி ஆணையர் ரஜினிஷ் காஷ்யப் பேசுகையில், “ஆரம்பக் கட்ட விசாரணையில் அதிகாரியின் தரப்பில் தவறு நடந்துள்ளது உண்மைதான். பின்னர் அந்த பெல்ட் தடயவியல் ஆய்வகத்திற்கும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது” என்றார். மேலும், ட்விஷா தூக்கில் தொங்கிய உடனே போலீசுக்குத் தகவல் தெரிவிக்காமல், அவரது உடலை அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது ஏன்? என்பது குறித்தும், வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ட்விஷா கடுமையான மனநோயாளி என்றும், போதைக்கு அடிமையானவர் என்றும் அவரது மாமியாரான ஓய்வுபெற்ற நீதிபதி கிரிபாலா சிங் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனக் காவல்துறை தற்பொழுது திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், வரதட்சணை புகாரில் இருந்து தப்பிக்க, ட்விஷாவிற்கு தாங்கள் ₹5,000 முதல் ₹50,000 வரை ஆன்லைனில் பணம் அனுப்பியதற்கான ரசீதுகளை நீதிமன்றத்தில் கிரிபாலா தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி கிரிபாலா சிங்கிற்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அவரது மகன் சமர்த் சிங்கின் ஜாமீன் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் சமர்த் சிங் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு போபால் காவல்துறை ₹10,000 ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விஷாவின் தந்தை நவநிதி சர்மா கூறுகையில், “மருமகனின் ஜாமீன் மறுக்கப்பட்டது நீதிக்கான ஒரு சிறிய படிதான். மாமியாரும், கணவனும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் போதுதான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் கடுமையான மன உளைச்சலால் ட்விஷா 15 கிலோ வரை உடல் எடை குறைந்திருந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
