உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், 44 வயதுடைய விதவை பெண் ஒருவரின் வாயைக் கட்டி, டீசல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். ரசூல்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனேக்ஸ்ரீ (44). இவரது கணவர் கிஷன் பால் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அனேக்ஸ்ரீ தனது 15 வயது மகனுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் அனேக்ஸ்ரீ வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, உள்ளூர் ரவுடிகள் சிலர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர்.

அங்கிருந்த அனேக்ஸ்ரீயை வலுக்கட்டாயமாகப் பிடித்து பக்கத்து அறைக்கு இழுத்துச் சென்ற கும்பல், அவரைப் மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது. பின்னர், அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயைத் துணியால் இறுக்கமாகக் கட்டியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கொடூரத்தின் உச்சமாக அவர் மீது டீசலை ஊற்றித் தீ வைத்துள்ளனர்.

தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்ட கடுமையான வேதனையில் அனேக்ஸ்ரீ எழுப்பிய முனகல் சத்தத்தைக் கேட்டு, பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது 15 வயது மகன் திடுக்கிட்டு எழுந்துள்ளார். அவர் அலறியடித்துக்கொண்டு ஓடிவருவதைக் கண்ட அந்தப் பாதகர்கள், நள்ளிரவு இருளைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

உடனே, உடல் கருகிய நிலையில் இருந்த அனேக்ஸ்ரீயை மீட்ட உறவினர்கள்  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், நிலைமை மோசமடைந்ததால் அலிகார் மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கின் முக்கியத் திருப்புமுனையாக, அனேக்ஸ்ரீ உயிரிழப்பதற்கு முன் காவல்துறை மற்றும் நீதித்துறை நடுவர் (Magistrate) முன்னிலையில் அளித்த மரண வாக்குமூலம்  அமைந்துள்ளது. மரணத்தின் விளிம்பிலும் வேதனையால் துடித்தபடி அனேக்ஸ்ரீ, “நான் இனி பிழைக்க மாட்டேன்… ஷியோராஜ், நீ நாசமாய்ப் போவாய்!” என்று முதன்மைக் குற்றவாளியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீஸ் எஸ்பி அதிரடி உத்தரவு
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ண குமார் பிஷ்னோய் கூறுகையில், “உயிரிழந்த பெண்ணின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் முதன்மைக் குற்றவாளி ஷியோராஜ் உட்பட இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சட்ட ஒழுங்கைத் கையில் எடுக்கும் சமூக விரோதிகள் எவரும் தப்ப முடியாது, அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்துள்ளார்.