தவறான வாக்குறுதிகளை கூறி 16 வயதிற்கு உட்பட்டோரை பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது என பயிற்சி மையங்கள் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பல புகார்கள் அளிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் பயிற்சி மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக புதிய விதிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்புக்கும் குறைவாக படித்துள்ள நபர்களை பயிற்சி மையங்களில் ஆசிரியர்களாக நியமிக்க கூடாது.

நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற வைப்பது போன்ற தவறான வாக்குறுதிகளை அளித்து பெற்றோர்களை திசை திருப்பி மாணவர் சேர்க்கையில் ஈடுபடக்கூடாது. 16 வயதுக்குட்பட்டோரை எக்காரணம் கொண்டும் பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது. இடைநிலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களை மட்டுமே பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும். பயிற்சி மையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு ஏற்ப முறையான கட்டணங்களை மட்டும் வசூல் செய்ய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சியில் சேரும் மாணவர்கள் அதற்கான முழு தொகையை செலுத்தி விட்டு பாதையில் பயிற்சியை நிறுத்தினால் மீதமுள்ள தொகையை 10 நாட்களுக்குள் பயிற்சி மையங்கள் திருப்பி வழங்க வேண்டும். இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் ஏற்கனவே உள்ள பயிற்சி மையங்கள் மற்றும் புதிய மையங்கள் என அனைத்து பயிற்சி மையங்களும் பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.