சென்னை மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் ரிப்பன் மாளிகையில் தொழிலாளர்களுடன் நேற்று  பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை தெளிவாக தெரிவித்துள்ளார் என்றும், அரசு தரப்பில் செய்யக்கூடியவற்றை பரிசீலித்து விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.

அவர் மேலும், “நாங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்தோமா? என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது,  எதையும் உடனடியாக வழங்குவோம் என்று சொல்ல முடியாது. தொழிலாளர்கள் நம்முடைய மக்கள், நம்மோடு உணவு, உறவு எல்லாவற்றிலும் கலந்து இருப்பவர்கள். அவர்கள் தரப்பில் நியாயமான கோரிக்கைகள் உள்ளன. அரசு தரப்பில் செய்யக்கூடியதை விளக்கியுள்ளோம். இரு தரப்பும் கலந்துரையாடியுள்ளோம். மறுபடியும் சந்தித்து தீர்வு காண முயற்சி செய்வோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம், மாநகராட்சி பணிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அரசு விரைவில் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பிற நலன்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.