​”ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குன்னு ஸ்டாலின் கூப்பிட்டப்பவே ஓடிப்போய் கைகொடுக்காத இந்த திருமாவளவன், பதவிக்காக யாரிடமும் கெஞ்சவும் இல்லை, வாதாடவும் இல்லை!” என்று தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததன் பின்னணி குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் மேடையில் பேசிய அதிரடி பேச்சு, தற்போது தமிழக அரசியலில் காட்டுத்தீயாய் பரவி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தாங்கள் பதவிக்காகவோ அல்லது பரிசுக்காகவோ நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர்கள் அல்ல என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ள அவர், தேர்தலுக்கு முன்பு தவெக மீது தங்களுக்குச் சில கொள்கை ரீதியான சந்தேகங்கள் இருந்ததாகவும், ‘ஆர்.எஸ்.எஸ். பெற்ற பிள்ளைகள்’ என்று தாம் விமர்சித்ததையும் ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தவெக மீதான அந்தச் சந்தேகங்கள் தற்போது எப்படித் தீர்ந்தது என்பது குறித்த அதிரடி ரகசியத்தையும் மேடையிலேயே போட்டு உடைத்துள்ளார்.

​தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக நினைத்திருந்தால் அதிமுக ஆதரவோடு எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும் அல்லது பிற கட்சிகளை இழுத்திருக்க முடியும்; அதை விடுத்து, மதசார்பற்ற சக்திகளாக அடையாளம் காணப்பட்ட எங்களை அழைத்து ஆதரவு கோரியது தவெக-வின் துணிச்சலான முடிவு என்று பாராட்டியுள்ளார். இந்த முடிவு தவெக-வின் மதசார்பின்மை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியதால் மட்டுமே, தங்களது சந்தேகங்கள் தீர்ந்து ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்டுத் தன் மீதான விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கியுள்ளார்.