மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், மேட்ரிமோனி இணையதளத்தில் தன்னை ஒரு கோடீஸ்வர ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சிவில் இன்ஜினியர் என்று போலியாகச் சித்தரித்து, கல்யாண் பகுதியைச் சேர்ந்த 36 வயது விவாகரத்து பெற்ற பெண்ணை ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணிடம் திருமண ஆசை காட்டியும், அவரது குழந்தையை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தும் நம்பிக்கையைப் பெற்ற அந்த நபர், பின்னர் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
மேலும், அந்தப் பெண்ணிடமிருந்து 41 லட்ச ரூபாய்க்கும் மேல் பணத்தைப் பறித்ததுடன், அவரது காரைத் போலி ஆவணங்கள் மூலம் விற்றுவிட்டு, மற்றொரு காரையும் பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே முறையைப் பின்பற்றி அந்த நபர் மேலும் பல பெண்களை ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது தலைமறைவாக இருக்கும் அந்த மோசடி நபரைப் பிடிக்க தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் அந்நியர்களை முழுமையாக நம்புவதற்கு முன்பு, அவர்கள் குறித்த பின்னணியை சரிபார்க்க வேண்டும் என்று காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
