மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், அரசு ஆம்புலன்ஸில் டீசல் இல்லை என்ற காரணத்தால் அவசர உதவி கிடைக்க தாமதமானதால், கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றிலேயே பச்சிளம் குழந்தை உயிரிழந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜவாலா பஜார் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்குக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் 108 மற்றும் 102 ஆகிய அரசு ஆம்புலன்ஸ் சேவைகளைத் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எந்தவொரு ஆம்புலன்ஸும் வராததுடன், வாகனத்திற்கு டீசல் இல்லை என்றும், அதனால் தங்களைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டாம் என்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தின் வெளியே ஒரு ஆம்புலன்ஸ் நின்றிருந்தும், பலமுறை கெஞ்சிக் கேட்டும் அது தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பெண்ணின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஏழைக் குடும்பத்தினரான அவர்கள் தங்களுக்குள் பணத்தைச் சேர்த்து ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து ஹிங்கோலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு விரைந்தனர்.
அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த போதிலும், மருத்துவமனைக்கு வர ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களின் அவசர மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனப் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சர் பிரகாஷ் அபித்கர் தெரிவித்துள்ளார்.
