பிரபல நடிகையும் மாடல் அழகியுமான ட்விஷா சர்மா மரண வழக்கில், அவரின் மாமியாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிரடியாகக் கைது செய்துள்ளது.

ட்விஷா சர்மாவுக்கும், கிரிபாலா சிங்கின் மகன் சமர்த் சிங்கிற்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்த நிலையில், கடந்த மே 12ஆம் தேதி ட்விஷா தனது மாமியார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

தற்கொலை என்ற விபரீத முடிவை எடுப்பதற்கு முன்பாக, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமைக்கார நடத்தை குறித்து ட்விஷா தனது தோழிகளுடனும் குடும்பத்தினருடனும் சாட்டிங்கில் பகிர்ந்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதியான மாமியார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கைத் திசைதிருப்ப முயல்வதாக ட்விஷாவின் பெற்றோர் மாநில முதலமைச்சர் மோகன் யாதவை நேரில் சந்தித்துக் முறையிட்டதை அடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கிரிபாலா சிங்கின் முன்ஜாமீன் மனுவை அதிரடியாக ரத்து செய்ததைத் தொடர்ந்து, போபாலில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், சில மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்தனர்.

ஏற்கனவே முதன்மைச் சந்தேக நபரான ட்விஷாவின் கணவர் சமர்த் சிங்கை சிபிஐ தன் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், தற்போது மாமியாரும் கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.