அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மனநலம் குன்றிய மனரஞ்சன் என்ற நபர் எதிர்பாராத விதமாக நுழைந்து விருந்தில் கலந்து கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் யாரும் அசிங்கப்படுத்தியோ அல்லது வெளியேற்றவோ முயலாமல், தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த விருந்தினரைப் போல அன்போடு வரவேற்று உணவளித்தனர். இந்த மனிதநேயமிக்க உபசரிப்பு அங்கிருந்தவர்களை நெகிழ வைத்த நிலையில், சாப்பிட்டு முடித்த பின் மனரஞ்சன் செய்த செயல் ஒட்டுமொத்த இணையதளவாசிகளின் கண்களையும் குளிரச் செய்துள்ளது.

 

அவர் திருமண மேடைக்குச் சென்று, தனது கிழிந்த பாக்கெட்டிலிருந்து சுருங்கிப்போன ஒரு 10 ரூபாய் நோட்டை எடுத்து மணமகளுக்கு ‘மொய்’ ஆக வழங்கினார். தன்னிடம் பெரிய அளவில் வசதி இல்லாவிட்டாலும், தமக்கு உணவளித்த குடும்பத்தின் மணமக்களை வாழ்த்த வேண்டும் என்ற அவரது தூய்மையான எண்ணம் அனைவரையும் உருக வைத்துள்ளது. ஆடம்பர பரிசுகளை விட இந்த 10 ரூபாய் நோட்டே உலகில் மிக உயர்ந்த மதிப்புடையது என்றும், மனிதநேயத்திற்குச் சான்றாக விளங்கும் இந்த அசாம் குடும்பத்தின் உபசரிப்பும், அந்த நபரின் பேரன்பும் இணையத்தில் தற்போது பெரும் விவாதமாகவும், ட்ரெண்டிங்காகவும் மாறியுள்ளது.