கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாகவே முதலமைச்சர் நாற்காலியைப் பிடிப்பதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், இன்று முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
நேராக பெங்களூருவில் உள்ள லோக் பவனுக்குச் சென்ற அவர், அங்கு ஆளுநர் இல்லாத காரணத்தால் தனது விலகல் கடிதத்தை ஆளுநரின் சிறப்புச் செயலாளரிடம் ஒப்படைத்தார்.
பதவிய விலகிய பின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ள சித்தராமையா, ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு இருமுறை முதலமைச்சராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததற்குத் துணையாக நின்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக மக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தையே தனது மதமாகவும், மக்களைத் தன் கடவுளாகவும் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த ராஜினாமா என்பது வெறும் முதலமைச்சர் பதவியிலிருந்து மட்டுமே தவிர, தனது இறுதி மூச்சு இருக்கும் வரை சமூக நீதித்திற்காகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து களத்தில் நிற்பேன் என்றும் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
