மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ (RTO) அலுவலகம் முன்பாக தம்பதியரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு நடுரோட்டில் போர்க்களமாக மாறியுள்ளது. ஆக்ராவிலிருந்து வேலை விஷயமாக சத்தர்பூர் வந்த தேவ சௌராசியா – சுமேன் சௌராசியா தம்பதியினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் எல்லை மீறியதில், ஆத்திரமடைந்த மனைவி சுமேன், கணவரின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு நடுரோட்டில் வைத்து சரமாரியாக கன்னத்தில் அறைந்து, கடுமையான வார்த்தைகளால் வசிய நாடகம் ஆடியுள்ளார். இவர்களது சிறிய குழந்தைக்கு முன்னிலையிலேயே இந்த மோதல் அரங்கேறியுள்ளது.

 

இந்த சம்பவத்தின் போது அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், சண்டையை விலக்காமல் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியதால் இந்த காட்சிகள் தற்போது காட்டுத்தீயாக பரவி வருகின்றன. அப்போது அந்த கணவன், “நான் மட்டும் இதற்குத் திருப்பி எதிர்வினையாற்றி இருந்தால், அனைவரும் என் மீதே குற்றம் சுமத்தி போலீசில் ஒப்படைத்திருப்பார்கள்” என்று அங்கிருந்தவர்களிடம் அழுதுகொண்டே நியாயம் கேட்டுள்ளார்.

இந்த மோதலால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து இதுவரை காவல் நிலையத்தில் எந்தவொரு தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.