ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8-ல் தோல்வியடைந்துள்ள அந்த அணி, லக்னோ அணியுடன் சேர்ந்து தொடரை விட்டு வெளியேறிய இரண்டாவது அணியாக மாறியுள்ளது.
ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ஹார்டிக் பாண்டியா தலைமையில் களம் கண்டு வரும் மும்பை அணியின் இந்தத் தொடர் சரிவு ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணியின் இந்த வீழ்ச்சி குறித்துப் பேசிய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், தற்போதைய வீரர்களிடம் போராடும் குணம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் விளையாடிய காலத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் மீண்டு வருவோம் என்ற தன்னம்பிக்கை இருந்தது; ஆனால் இப்போதுள்ள வீரர்களின் உடல்மொழி அவர்கள் முதலிலேயே தோல்வியை ஒப்புக்கொண்டது போல் இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், முன்பெல்லாம் மும்பை அணியில் தரமான இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் உள்ளூர் வீரர்கள் பலமாக இருந்தனர், இப்போது அந்தப் பலம் இல்லாதது அணியின் சரிவிற்கு முக்கியக் காரணம் என்றும் ஹர்பஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
