ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிடைத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டத்தில், 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப்பிடிக்க உர்வில் படேல் ஆடிய ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தனது போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி, டக்அவுட் அருகே இருந்த தொலைக்காட்சியில் உர்வில் படேலின் பேட்டிங்கை இமைக்காமல் ரசிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம் வீரர் ஒருவரின் அதிரடியைக் கண்டு நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் கோலி வியந்து நிற்பது, உர்வில் படேலின் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
From Chennai to Raipur! 💛❤️
Even @imVkohli stopped for a moment to catch a glimpse of #UrvilPatel‘s historic 65(23) 👏#TATAIPL Revenge Week 2026 ➡️ #RCBvMI | LIVE NOW 👉https://t.co/y41wRLoDHD pic.twitter.com/3J2CfFkxbV
— Star Sports (@StarSportsIndia) May 10, 2026
இந்த ஆட்டத்தில் வெறும் 23 பந்துகளில் 65 ரன்களை விளாசினார் உர்வில். இதில் 8 இமாலய சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். குறிப்பாக, வெறும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை உர்வில் சமன் செய்துள்ளார்.
அரைசதம் அடித்தவுடன் உர்வில் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து உயர்த்திக் காட்டினார். அதில் “இது உங்களுக்காக அப்பா” (This is for you, Papa) என்று எழுதப்பட்டிருந்தது. தனது வளர்ச்சிக்குத் தூணாக இருந்த தந்தைக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை அவர் அர்ப்பணித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் பந்திற்கு ஏற்றவாறு விளையாடினேன். பயிற்சியாளரும், கேப்டன் ருதுராஜும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தனர் என போட்டிக்குப் பிறகு உர்வில் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
