ஐபிஎல் 2026 தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் வர்ணனையின் போது கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக விளையாடிய குருணால் பாண்டியா (73 ரன்கள்), போட்டியின் இக்கட்டான கட்டத்தில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். வலியால் அவர் துடித்தபோது, மனிதாபிமான அடிப்படையில் மும்பை அணியின் விக்கெட் கீப்பர் ரையன் ரிக்லெட்டன் அவருக்கு உதவி செய்ய ஓடி வந்தார்.
அப்போது தமிழ் வர்ணனையில் இருந்த பத்ரிநாத், “அப்படியே அந்த தசைப்பிடிப்பிலேயே அவர் செத்துப்போகட்டும், யாரும் அவருக்கு உதவி செய்யாதீர்கள்” என்ற ரீதியில் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
"Let him die of cramps on the ground" says former cricketer S Badrinath while doing Tamil commentary during the RCB MI game. How is this being tolerated, how's this funny? pic.twitter.com/qy8X7jXd73
— Deepak Bopanna (@dpkBopanna) May 11, 2026
ஒரு வீரர் காயத்தால் வலியால் துடிக்கும்போது, ஒரு முன்னாள் சர்வதேச வீரரே நேரலையில் அவர் இறக்கட்டும் என்று வேண்டுவது அநாகரீகத்தின் உச்சம் என ரசிகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். “விளையாட்டு உணர்வு எங்கே போனது?” என்றும், “அதிரடியாக விளையாடுகிறார் என்பதற்காக ஒரு மனிதனின் உயிரையே துச்சமாக மதிப்பார்களா?” என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
This is Subramaniam Badrinath
– He's an ex csk player
– Hates rcb and Kohli to the coreToday when Krunal was struggling with pain, he said "just let him die there" in tamil commentary. Later on he covered up that statement by saying he was just joking as he wants rcb to lose.… pic.twitter.com/VuwyOhLjx0
— ` (@worshipVK) May 10, 2026
இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, பத்ரிநாத் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எதிரணி வீரராக இருந்தாலும் ரிக்லெட்டன் அவருக்கு உதவி செய்ததை நான் பாராட்டவே செய்தேன். ‘அவர் செத்துப்போகட்டும்’ என்பது எனது எண்ணம் அல்ல; அந்தச் சூழலின் தீவிரத்தைச் சொல்லப் பயன்படுத்திய பேச்சு வழக்குச் சொல் அது” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நேரலையில் பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக பத்ரிநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
