தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் உற்சாகத்துடனும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்று முடிந்துள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்ற பெண் தொண்டர்கள், தங்கள் தலைவர் விஜய்யை ஆர்வத்துடன் வர்ணித்து பேட்டியளித்தனர். “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நான்கு வாசல்கள் உள்ளதைப் போல, எங்கள் விஜய் அண்ணாவுக்கு எல்லா திசைகளிலும் வாசல் உண்டு. நாங்கள் அனைத்து வாசல்களையும் திறந்து வைத்து அவரது வருகைக்காக காத்திருக்கிறோம்,” என்று உறுதியுடன் கூறினர்.

மேலும், “2026இல் பெண்களுக்கு மிகப்பெரிய துணையாக விஜய் அண்ணா இருப்பார். மக்களோடு மக்களாக நின்றால்தான் அரசியல் செய்ய முடியும். வெறும் ஷோ  காட்டுபவர்கள் நாங்கள் இல்லை; 2026இல் அதை நிரூபிப்போம்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர். மேலும்  “சீமான் எங்களை அணில் குஞ்சுகள் என்று கூறினார். ஆனால், நாங்கள் அணில் குஞ்சுகள் அல்ல, அக்னி குஞ்சுகள்! எங்களது நெருப்பு அவர்களை சுட்டுவிடும் என்ற பயத்தில்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்,” என்று கூறினார்.

அதோடு, “சீமானுக்கு வயிற்றெரிச்சல் அதிகமாக இருக்கிறது. அவருக்கு தண்ணீர் கொடுத்தோ அல்லது ஆம்புலன்ஸ் அனுப்பியோ அவரது வயிற்றெரிச்சலை அணைத்து விடுங்கள்,” என்று கிண்டலாகவும் விமர்சித்தார். இந்த பேட்டியின் காணொளி எக்ஸ் தளத்தில் வெளியாகி, பரவலாக கவனம் பெற்று வருகிறது.