தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெக சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்ப்பட்டி நாராயணன், ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த நிலையில், மொத்தம் 62,453 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 11,502 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சட்டமன்றத்திற்குள் தவெக-வின் முதல் பிரதிநிதியாக நுழைகிறார் ரெட்டியார்ப்பட்டி நாராயணன்.
தனது முதல் தேர்தலிலேயே ஒரு தேசியக் கட்சியை வீழ்த்தி தவெக வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதி முழுவதும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் கட்சிப் பாடல்களை ஒலிக்கச் செய்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
